வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் அடுத்த வருடம் மூடப்படவுள்ளது!!

584

Camp

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் அடுத்த வருடம் நடுப் பகுதியில் மூடப்படும் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் தற்போது 122 விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், புனர்வாழ்வு முகாம் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் சிங்கள மொழி பாடநெறியை பூர்த்தி செய்த, முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர், 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் அரசாங்கத்தின் புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரத்து 800 பேர் பயிற்சிகளை முடித்து சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் முடிவின் போது 594 சிறுவர் போராளிகள், பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இவர்களுக்கு கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.

இவர்களில் பலர் உயர்கல்வியை கற்று வருகின்றனர். புனர்வாழ்வு முகாமில் பயிற்சி பெற்று சென்றவர்களில் நான்கு பேர் தற்போது மருத்துவர்களாக தேசிய வைத்தியசாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

அத்துடன் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சிகளை முடிந்த முன்னாள் போராளிகள் பலர், வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருகின்றனர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.