உரிய முறையில் பராமரிக்கப்படாத, நெரிசலான பேருந்து ஒன்று திங்களன்று வட இந்தியாவில் வீதியை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளதோடு மற்றும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது பேருந்தில் சுமார் 60 பேர் பயணம் செய்துள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணியாளர்களின் குழுக்கள் தளத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
குறிப்பாக மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் ஏழு பயணிகள் சிகிச்சைப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம், உத்தர பிரதேச மாநிலத்தில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றின் மீது மோதியதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், மே மாதம், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரில் உள்ள மலைப்பாங்கான நெடுஞ்சாலையில் இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர்.