படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபரின் மற்றுமொரு புகைப்படத் தொகுப்பு ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளது.
இதேவேளை, குறித்த சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என பொலிஸாருக்கு தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரான மத்துகம பிரதேசம் உட்பட பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
போதைபொருள் கடத்தலின் கும்பல் தலைவன் கணேமுல்ல சஞ்சீவ, கடந்த 19ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணி போல் வேடமணிந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் கமாண்டோ சமிந்து உட்பட 8 சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைச் சம்பவம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், கொலைக்கு மூளையாகக் கருதப்படும் 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
எவ்வாறாயினும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை, மேலும் சந்தேகத்திற்கிடமான பெண் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் தெஹிவளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
மேலும், அவர் மத்துகம பிரதேசத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று(24) இரவு விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறியமைக்கான ஆதாரங்கள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.