எதிர்வரும் நாட்களில் இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததை தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று காலை பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறாத நிலையை அடைவார்கள். கடந்த நெருக்கடி காலகட்டத்தின் போது இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் விரைவில் நாட்டிற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டு அவர்கள் முதன்முதலில் நாட்டிற்கு வந்தபோது, நாட்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு, மருந்துகள் போன்றவற்றின் தேவை இருந்தன. அந்த நேரத்தில், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இருந்தன.
எனினும், தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் கையிருப்புகள் இப்போது கணிசமாக அதிகரித்துள்ளன.
திட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளில் அரைவாசி ஏற்கனவே எட்டப்பட்டுள்ளமை ஊக்கமளிப்பதாக பீட்டர் பிரூவர் மேலும் தெரிவித்துள்ளார்.