சுத்தமான இலங்கை என்ற எண்ணக்கருவுடன் பால்நிலை சமத்துவத்தினை அடைந்து கொள்வோம் – சுபாசினி சிவதர்சன்

389

சுத்தமான இலங்கை என்ற எண்ணக்கருவுடன் பால்நிலை சமத்துவத்தினை அடைந்து கொள்வோம் – சுபாசினி சிவதர்சன்


சுத்தமான இலங்கையின் பிரதான தூண்களான சுற்றுச்சூழல், சமூகம், நெறிமுறை என்பவற்றுடன் பால்நிலை சமத்துவத்தின் தேவையை உணர்த்துவதாக இக்கட்டுரை அமைகின்றது. என்ன வளம் இல்லை நம் தாய்த்திருநாட்டில் நம் நாடு இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவு நாடாக அமைந்திருந்தாலும் அதன் வளங்கள் அளப்பரியன. இயங்கைவளம், கலாச்சார வளம் , மனிதவளம் எனப் பல்வேறு அம்சங்களால் தன்னிறைவு பெற்று விளங்குகின்றது.

இயற்கை வளமாக தேயிலை, தென்னை, இறப்பர் பயிர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றுகின்றன. அரியவகை மூலிகைகள், வனஉயிரினங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. ஆறுகள் , குளங்கள், நீர்வீழ்ச்சிகள், என்பவற்றால் ஓர் நீர்வளம் நிறைந்த நாடு நம் தாய்த்திருநாடு. மகாவலிகங்கை போன்ற ஆறுகள் விவசாயத்திற்கும் நீர்மின்சார உற்பத்திக்கும் உதவுகின்றன. கிராஃபைட், இரத்தினக்கற்கள், தங்கம் போன்ற கனிம வளங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன.


எம்மைச் சுற்றியுள்ள கடல் பல்வகையான மீன்வகைகள், கடல்வாழ் உயிரினங்களைக் கொண்டுள்ளது. இதனால் மீன்பிடித் தொழிலுக்கு முக்கியமான ஆதாரமாக விளங்குகின்றது. கலாச்சார வளமாக சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் போன்ற பல்லின சமூகத்தின் கலாச்சாரங்களைக் கொண்டுள்ளதுடன் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்துவமான கலாச்சார, பாரம்பரிய கலை வடிவங்கள் உள்ளன.

புராதன நகரங்கள், கோட்டைகள் மற்றும் கோயில்கள் பல வரலாற்றுச் சின்னங்களாக நம் வளமான வரலாற்றை பறைசாற்றுகின்றன. கைவினைப் பொருட்கள், நடனம்,இசை மற்றும் நாடகம் போன்றன கலை மற்றும் கைவினை வடிவங்களில் சிறந்து விளங்குகின்றது. மனித வளமாக அதிக எண்ணிக்கையில் இளைஞர் யுவதிகளைக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றனர். கல்வியறிவு விகிதத்தில் வளமான வாய்ப்புக்களை கொண்டிருக்கின்றன.இந்த வளங்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் கிடைத்த ஆதாரங்கள் அல்லவா!

இவ்வளங்களைக் கொண்டு இன்று பல்துறைகளில் பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவி வருகின்றார்கள். ஆடை உற்பத்தி, விவசாயம், சுற்றுளா, தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளில் அவர்கள் தடம் பதித்து விட்டார்கள். பல பெண்கள் தமது சொந்த தொழில்களாக சிறுவணிகங்கள,; கைவினைப் பொருட்கள் உற்பத்தி, உணவுபதப்படுத்தல் தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்கள். நிறுவனங்களில் உயர் நிர்வாக பதவிகளை வகித்து சிறந்த தலைமைத்துவத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு செயற்படுகின்றார்கள். வீட்டுப்பணி செவிலியர்பணி என வெளிநாடுகளில் குறிப்பாக மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு கனிசமான பங்களிப்பை வளங்கி வருகின்றார்கள். எனினும் பால்நிலை சமத்துவம் சார்ந்து அவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றார்கள்.

பால்நிலை சமத்துவம் என்பது அனைத்து பாலினத்திற்கும் சமமான உரிமைகள், வாய்ப்புக்கள் மற்றும் சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற கருத்தை குறிக்கின்றது. ஒருவரின் பாலினத்தை அடிப்படையாக வைத்து எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது. இது கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கை உட்பட அனைத்து துறைகளிலும் சமத்துவத்தை உள்ளடக்கியது. இது ஒரு அடிப்படை மனித உரிமை, நீடித்த நிலையான சமூகத்திற்கு அவசியமானது. சமமான உரிமைகள் , சமமான வாய்ப்புக்கள், சமூக நீதி, பொருளாதார மேம்பாடு, அரசியல் பங்கேற்பு அனைத்து பாலினத்திற்கும் கிடைக்க வேண்டும் .

சுத்தமான இலங்கை என்ற எண்ணக்கருவானது சுத்தம், அழகு, சுகாதாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பவற்றுடன் தொடர்புடையதாக அமைகின்றது. தூய்மையான இலங்கையின் நிலையான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றுபடும் இத்தருணத்தில் பாலின சமத்துவம் என்பதனைக் கருத்தில் கொள்வது ஒரு சமூக கட்டாயம் மட்டுமல்ல சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கான அடிப்படையாகவும் ஒழுக்கநெறி மேம்பாடாகவும் அமைகின்றது. இவற்றில் பங்கேற்க பெண்களுக்கு அதிகாரமளிப்பது நிலையான தீர்வுகளுக்கு வழிவகுக்கும்.

சுத்தமான சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்கள்

பாரம்பரிய பாலின பாத்திரங்களிலிருந்து அவர்கள் வெளிவந்து கல்வி, பொருளாதாரம், அரசியல் வாய்ப்புக்களைப் பெற்று முடிவெடுக்கும் சக்தியுடையவர்களாக அவர்களுக்கு சமவாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பொறுப்பாளர்களாக அவர்களின் திறன்களை வெளிப்படுத்த முடியும். பெண்கள் இயற்கையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். பூஞ்செடிகளை நாட்டி வீட்டை அலங்கரிக்கும் பெண்கள் பயன்தரு மரங்களை நாட்டி சுற்றுச்சூழலுக்கு பசுமையான காற்றுச் சூழலை அதிகரிக்கலாம். தமது உற்பத்திப் பொருட்கள், தொழிற்சாலைக் கழிவுகளை சரியான முறையில் முகாமை செய்ய பழக வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை வீசி எறிவதைத் தடுத்து குப்பைகளை முறையாக நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். குடிக்கும் நீர் மற்றும் ஏனைய நீர்நிலைகளைப் பாதுகாக்க சந்ததியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எம் நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து உலகிற்கு வெளிப்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். பால்நிலை சமத்துவம் மேம்படும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முன்னேற்றம் ஏற்படும். சுற்றுச்சூழலை பாதுகாத்து நோயற்ற சமூகமாக எம்மக்களை ஆரோக்கியமாக வாழவைக்க ஒவ்வொரு பெண்களும் சிந்திக்க வேண்டும்.

சமூக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பில் பெண்கள் – கல்வி

அனைத்து குழந்தைகளுக்கும், குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கான திறன் அபிவிருத்தி விடயங்கள் மேம்பாடடைய வேண்டும். பெண்கள் உரிய வயதில் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்த விருப்பத்துடன் முன்வர வேண்டும்.
சுகாதாரம்

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடல் மற்றும் மனநலத்திற்கான சேவைகள் கிடைக்க வேண்டும். இனவிருத்திச் சுகாதாரம் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்பட்டு வேண்டாத கர்ப்பங்களை தவிர்க்க வேண்டும். சுத்தமான பொதுக்கழிப்பிடங்கள் அணுகக்கூடியதாக அமைய வேண்டும். நோயற்ற சமூகமாக உருவாக வேண்டும். அவர்களின் உள ஆரோக்கியம் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொருளாதாரம்

பெண்கள் சமமான வாய்ப்புக்களைப் பெறும்போது நாட்டின் பொருளாதார உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அவர்களின் அனைத்து திறமைகளும் பயன்படுத்தப்படும்போது நாடு முன்னேறும்.
வேலைவாய்ப்பு

பாலின பாகுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். அவர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். கொள்கை வகுப்பிலும் முடிவெடுக்கும் நிலையிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் தங்களின் சிறுவர் உரிமைகளை அனுபவிக்கும் சூழல்கள் உருவாக வேண்டும். இன்னும் சில இடங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வது, விரும்பிய தொழிலை தொடங்குவது என்பதற்கு பல்வேறு சமூக தடைகள் உள்ளன.

சட்டம்

பால்நிலைப் பாகுபாட்டை எதிர்க்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இருக்கும் சட்டங்கள் பெண்கள் சிறுமிகளைப் பாதுகாக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் வகையில் அவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் கிடைக்கப்பெற வேண்டும்.

நெறிமுறைப் பார்வையில் அவள்

நெறிமுறை என்பது ஒழுக்கம் குறித்த கண்ணோட்டத்தைக் குறிக்கின்றது. ஒரு நல்லொழுக்கமுள்ள நபர் சரியான செயலை முன்னெடுப்பார். சரியான செயல் என்பது அதிக எண்ணிக்கையில் மக்களுக்கு மிகவும் நன்மையை விளைவிக்கும் . ஒழுக்க நெறியின் தூண்களாக ஒன்றுபட்டிருத்தல், சுயமரியாதை, பொறுப்புக்கூறல், நம்பிக்கை, உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, சமத்துவம், இணக்கத்தன்மை, விசுவாசம் எனும் பண்புகளைக் கொண்டிருக்கும். மற்றோரை மரியாதை செய்து கழிவிரக்கத்தோடு அவர்களை நேசிப்பவர்களாக மக்கள் மாற வேண்டும். மனித நடத்தை மாற்றம் என்பது தனிநபரின் அறிவு, திறன், மனப்பாங்கு, பழக்க வழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். சாதி, மத, இன பால்நிலை பாரபட்சமின்றி அனைவரையும் நேசிக்க பழக வேண்டும். இந்த மாற்றம் ஒருவருக்கொருவர் நண்பர்களாகி குடும்பம் சமூக வலையமைப்பை ஆரோக்கியமாக கட்டியமைக்கும். இது சமூக நிறுவனங்கள் பாடசாலைகள், பணியிடங்களில் நல்ல புரிதல்களை உருவாக்கும். இதனால் வளமான சமூகங்கள், நகரங்கள், உருவாகும். இங்கு சட்டங்கள், கொள்கைகள் மக்களைப் பாதுகாக்கும். பெண்கள் தேசம் புன்னகைப்பூக்களால் நிறைந்திருக்கும். அனைத்து மனிதர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அடிப்படை மனித உரிமை. பால்நிலை சமத்துவம் நிலைநாட்டப்படும் போது சமூகத்தில் நீதியும் நியாயமும் அதிகரிக்கும். வன்முறையற்ற சமூக நல்லிணக்கம் வலுப்பெறும். ஊழலற்ற சமூக நோக்கில் மக்கள் நடத்தை மாற்றங்களில் விழிப்புணர்வடைவார்கள்.

சுத்தமான இலங்கை என்பது சமூகத்தில் நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு நிலையைக் குறிக்கின்றது.

பாரதியார் கூறியது போல் ‘பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீராது” இவ்வரிகள் பெண்களின் விடுதலை நாட்டின் விடுதலைக்கு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்த்துகின்றது.
‘ஆணும் பெண்ணும் சமம்’- என அன்றே பாரதி பால்நிலை சமத்துவத்தை ஆதரித்துதிருந்தார்.

‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என சாதி வேறுபாடுகளை ஒழித்து சுத்தமான சமூகத்தை உருவாக்க அன்றே குரலெழுப்பப்பட்டு விட்டது. எனவே அன்று பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக பால்நிலை சமத்துவத்தை உறுதி செய்வதன் மூலம் சுத்தமான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.

சுபாசினி சிவதர்சன்,
மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்,
பிரதேச செயலகம்,
வவுனியா தெற்கு.