வருமானம் இல்லாததால் விரக்தி அடைந்த தம்பதி, மகன், மகளை கொன்று தற்கொலை செய்து கொண்டனர். தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தியை சேர்ந்தவர் சந்திரசேகர்(44).
இவர் தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் ஹப்சிகுடாவில் வசித்து வந்தார். சந்திரசேகர் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையில் கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் கடந்த 6 மாதமாக வேலையின்றி வீட்டில் இருந்தார். இதனால் வருமானமின்றி குடும்ப தேவைக்கு பணமின்றி தவித்து வந்தார்.
இதனால் மனவேதனை அடைந்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரின் இந்த முடிவுக்கு கவிதாவும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நேற்றிரவு தூங்கிக்கொண்டிருந்த மகள் தா(15), மகன் விஸ்வன்(10) ஆகியோர் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியுள்ளனர்.
இதில் மயக்கமடைந்த இருவரும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். இதை உறுதி செய்துகொண்ட சந்திரசேகரும் கவிதாவும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து நீண்ட நேரமாக யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர்.
அப்போது அவர்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து சடலங்களை மீட்டனர். அப்போது அந்த வீட்டில் சந்திரசேகர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அதில், நான் நீரிழிவு நோய், நரம்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். எங்கள் வாழ்க்கையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னைகளை எதிர்கொண்டோம்.
எங்களின் சாவுக்கு யாரும் காரணமில்லை. எங்களுக்கு வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதற்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.