
6 வயதில் காணமல் போனவர் தனது 23ம் வயதில் கூகுள் தேடல் மூலம் பெற்றோருடன் மீண்டும் இணைந்துள்ளார்.
ஆறு வயதாக இருக்கும் போது குடியா என்ற பெண் பீகாரில் ரயிலில் காணாமல் போயினார். இதனையடுத்து கடந்த வாரம் அஸ்ஸாமில் உள்ள குவஹாத்தியில், அவரது பெற்றோருடன் தனது 23 வயதில் மீண்டும் இணைந்துள்ளார்.
தனது பெற்றோருடன் மீண்டும் இணைய உதவியதாக அரசாங்க அதிகாரிக்கும் மற்றும் கூகுள் தேடலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் இருந்து குவஹாத்திக்கு ரயிலில் தனது மாமாவுடன் 17 ஆண்டுகளுக்கு முன்பு குடியா பயணம் சென்றிருந்தார். அந்த சமயம் அவரது மாமா சாப்பாடு வாங்குவதற்காக ஒரு ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார், ஆனால் அவரால் சரியான நேரத்திற்குள் அந்த ரயிலை பிடிக்க முடியவில்லை.
ரயில்வே அதிகாரிகள் குடியா, குவஹாத்தி ரயிலில் தனியாக இருப்பதை கண்டறிந்து விசாரித்த போது, அவளால் தான் யார் என்று கூற முடியவில்லை. பின்னர் அவள் குவஹாத்தியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, அங்கேயே வளர்ந்தாள்.
அசாம் மாநிலத்தில் குழந்தை பாதுகாப்பு சமூகத்தின் அதிகாரியான நீலாக்ஷீ சர்மா, குடியாவின் பெற்றோரை கண்டுபிடிக்க முடிவு எடுத்து முயற்சி செய்தார். ஆனால், அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவருக்கு தனது மாமா பாட்னாவில் தன்னுடைய வீட்டிற்கு முன் உள்ள ரயில்வே கிராசிங்க்கு அருகில் இருக்கும் பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் என்பது மட்டுமே நினைவில் உள்ளதாக கூறியுள்ளார்.
குடியா காணாமல் போன போது அவருக்கு இந்தி மட்டும் பேச தெரியும், ஆனால் தற்போது அவருக்கு அஸ்ஸாமி மட்டுமே பேச தெரிகிறது.
பின்னர் திருமதி சர்மா கூகுள் தேடலை நாடினார். இது பற்றி அவர் கூறுகையில், ‘ நான் மணிக்கணக்காக கூகுளை தேடிப்பார்த்தபோது, ஒரு நாள் பாட்னாவில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையின் போன் நம்பர் எனக்கு கிடைத்தது. அதன் மூலமாக குடியாவின் மாமா மற்றும் பெற்றோரையும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.





