இந்தோனேஷியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்னர் பெற்றோருடன் இணைந்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக எழுந்த சுனாமி பேரலைகள் தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது.
இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலானோர் பலியாகினார். பலர் மாயமானார்கள். காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தோனேஷியாவை சேர்ந்த ராவ்தாதுல் ஜன்னா என்ற சிறுமி 10 வருடங்களுக்கு முன்னர் சுனாமியால் அடித்து செல்லப்பட்டார். இச்சிறுமி இறந்துவிட்டார் என்று பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சுனாமியால் அடித்துச்செல்லப்பட்ட இச்சிறுமியை அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீட்டு வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கையில், இவரின் தாயாரின் சகோதரர் பார்த்துவிட்டு, தன் தங்கையின் சாயலில் இருக்கிறாரே என்று எண்ணி வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரிக்கையில், சிறுமி சுனாமியால் அடித்து செல்லப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் ஜமாலியா கூறுகையில், கடவுள் இந்த அற்புதத்தை எங்களுக்கு கொடுத்துள்ளார். எனது மகள் 4 வயதில் காணாமல் போனார். ஆனால் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
என்னை விட்டு பிரிந்த எனது மகள் 10 ஆண்டுகளுக்கு பின்னர் எனக்கு கிடைக்க செய்த கடவுளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியை மீனவர்கள் மகிழ்ச்சியுடன் அவளது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.






