
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 533 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
கடந்த ஆறாம் திகதி காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 451 ஓட்டங்களைக் குவித்து தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது. அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய யூனிஸ்கான் 177 ஓட்டங்களைக் குவித்தார்.
பந்து வீச்சில் தில்ருவான் பெரேஹரா 5 விக்கெட்டுக்களை வீழ்த்த, ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுக்களையும், தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 221 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் 91 ஓட்டங்களையும் குஷால் சிர்வா 64 ஓட்டங்களையும், மஹெல ஜெயவர்த்தன 59 ஓட்டங்களையும் விளாசினர்.
இதன்படி மூன்றாம் நாளான இன்று 9 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 533 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தத் தீர்மானித்தது.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் இன்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 4 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இதன்படி இலங்கை அணி 78 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்க நாளை ஐந்தாம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது.
சங்கக்காரவின் சாதனைகள்..
இன்றைய போட்டியில், டெஸ்ட் போட்டிகளில் தனது 10வது இரட்டைச் சதத்தை பெற்றுக்கொண்ட சங்கக்கார அதிக இரட்டைச் சதங்களைப் பெற்றவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். 12 இரட்டைச் சதங்களுடன் சேர் டொன் பிரட்மன் முதலிடத்தில் இருக்கின்றார்.
மேலும் நேற்றைய தினம் தனது 37வது சதத்தை பெற்றுக்கொண்ட சங்ககார டிராவிட்டை பின்தள்ளி நான்காம் இடத்திற்கு முன்னேறினார். சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
மேலும் 2014ம் ஆண்டில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஒட்டங்களைப் பெற்றுக்கொண்ட வீரர் சங்கக்கார என்பது குறிப்பிடத்தக்கது.






