இந்திய அணி படுதோல்வி!!

668

Eng

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் ஸ்டேடியத்தில் கடந்த 7ம் திகதி தொடங்கியது.

முதல் இன்னிங்சில் இந்தியா 152 ஓட்டங்களில் சுருண்டது. அடுத்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 2வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 237 ஓட்டங்களை எடுத்திருந்தது. மழை காரணமாக இரண்டாம் நாளில் வெறும் 36 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. ஜோ ரூட் 48 ஓட்டங்களையும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 22 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஜோ ரூட்டும், பட்லரும் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். தொடர்ந்து ஜோ ரூட் 77 ஓட்டங்களுடனும், பட்லர் 70 ஓட்டங்களுடனும் வெளியேற, பின்னர் வந்த ஸ்டூவர்ட் பிராட் (12) காயத்தால் பாதியில் வெளியேறினார்.

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 367 ஓட்டங்களைச் சேர்த்து போது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

215 ஓட்டங்களால் பின்தங்கியிருந்த இந்திய அணி, 2வது இன்னிங்சையும் தடுமாற்றத்துடனேயே தொடங்கியது. முரளி விஜய், கௌதம் கம்பீர் தலா 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

புஜாரா (17) நடுவரின் தவறான எல்.பி.டபிள்யூக்கு இரையானார். எப்போதும் நிலைத்து நின்று ஆடக்கூடிய ரஹானேவும் (1) இந்த முறை ஏமாற்றினார். விராட் கோலி (7), ரவீந்திர ஜடேஜா (4), தோனி (27), புவனேஷ்வர்குமார் (10), வருண் ஆரோன் (9), பங்கஜ்சிங் (0) ஆகியோர் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.

இதனையடுத்து இந்திய அணி 43 ஓவர்களில் 161 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுக்களையும், அண்டர்சன், ஜோர்டான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் 15ம் திகதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.