நடத்தை சந்தேக தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மகன், மகளை கழுத்து நெரித்துக்கொன்ற லேப்-டெக்னிஷியன் தற்கொலை செய்துகொண்டார்.
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (42), அரசு ஆரம்ப சுகாதார நிலைய லேப் டெக்னிஷியன். இவரது மனைவி மஞ்சுளா (35). மகன் மரியன் (13), மகள் ஆராத்யா (9). இவர்கள் மல்காபூர் ஆதர்ஷ் நகரில் வசித்தனர்.
இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது சுபாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். கடந்த வாரம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் மஞ்சுளா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அவரை போனில் தொடர்புகொண்டு பேச முயன்றும் அவர் பேசவில்லையாம்.
இந்நிலையில் சுபாஷின் வீடு, கடந்த சில நாட்களாக திறக்கப்படாமல் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நேற்று இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொண்டாபூர் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு படுக்கையில் மகன், மகள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதே அறையில் சுபாஷ் தூக்கில் சடலமாக கிடந்தார். சடலத்தின் அருகே சுபாஷ் எழுதியதாக கூறப்படும் கடிதம் இருந்தது.
அதில், மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவி பிரிந்துசென்றதால் வேதனை அடைந்த நான், எனது குழந்தைகளுடன் இறந்துவிடுகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.