கொத்மலையில் நேற்று சம்பவித்த கோர விபத்தில் 22 உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நிலையில், அது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உலுக்கிய விபத்தாக மாறியுள்ளது.
இந்நிலையில் விபத்தின் போது உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு பலரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என சம்பவத்தின் போது அங்கிருந்த மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மற்றும் அம்புலன்ஸ் சேவைக்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட போதும், பல மணி நேரம் கடந்த நிலையிலேயே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பகிரப்படும் காட்சிகள், விபத்து ஏற்பட்டு பலர் பேருந்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர் கூடிய மக்கள் கூட்டமாகும்.
இறுதிக்கட்டத்திலேயே பொலிஸார் உட்பட பலர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தகவல் கொடுத்த உடன் விரைந்து செயற்பட்டிருந்தால் உயிரிழப்புக்களை குறைத்திருக்க முடியும்.
அதிகாலை வேளையில் பேருந்து கவிழ்ந்து வீழ்வதை கண்ட சிலர் அபாய குரல் எழுப்பிய நிலையில், அந்தப் பகுதியிலுள்ள மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தப் பகுதி இளைஞர்கள் விரைந்து செயற்பட்டு குழந்தைகளை முதலில் காப்பாற்றியுள்ளனர். இதன்போது காயப்பட்ட நபர்களும் இரத்தம் தோய்ந்த நிலையிலும் பலரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பேருந்தில் 70இற்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பலர் முழுமையாக மீட்பு பணி நிறைவடையும் வரை அங்கிருந்து தமது கடமைகளை செய்துள்ளனர். பல இளைஞர்கள், உணவு மற்றும் தண்ணீர் கூட அருந்தவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில உடல்கள் சிறதறுண்ட நிலையில் அவற்றினை பலர் கைகளால் அள்ளி செல்லும் காட்சிகள் கடும் வேதனையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இறுதிக்கட்டத்தில் பலர் அங்கு கூடிய நிலையில் பிரபலம் தேடிக்கொள்ளும் வகையில் செயற்பட்டதாகவும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கிராம மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளளனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அடிப்படை வசதிகள் இல்லை. அவசரத்திற்கு பனடோல் கூட அங்கு பெற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறான நிலையில் உயிருக்கு ஆபத்தானவர்களை எப்படி அங்கு அனுப்புவது என்பது பெரும் நெருக்கடி நிலையாக இருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.