கொட்டாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பரவியதில் 19 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையை சேர்ந்த புடம்மினி துரஞ்சா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டின் சொத்து மற்றும் கூரைக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்த சிறுமியின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வெசாக் கொண்டாட்டங்களை காண சென்றிருந்தபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுர தீயணைப்புத் துறையின் அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்த போதும் ஆனால் அந்த இளம் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதுடன் மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.