3 வயதில் அசிட் வீச்சில் பார்வையிழந்த மாணவி : 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்!!

32

3 வயதில் ஆசிட் தாக்குதலால் பார்வையிழந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய மாநிலமான அரியானா, ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தை சேர்ந்தவர் கஃபி (17). இவர் 2011-ம் ஆண்டில் தனக்கு 3 வயதாக இருக்கும் போது ஆசிட் தாக்குதலால் பார்வையிழந்தார்.

அப்போது இருந்தே இவர் பல சிரமங்களை கண்டுள்ளார். ஆனால், தற்போது 12-ம் வகுப்பு தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.



இவர் சண்டிகரில் செக்டார் 26 இல் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் பயின்று வந்தார். அங்கு ஆடியோ புக்குகள் மூலமாக பயிற்றுவிக்கப்பட்டது.

இவருக்கு டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு இருப்பதாகவும் கூறுகிறார். இதற்காக இவர் ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழக தேர்வை எழுதிவிட்டு சீட்டிற்காக காத்திருக்கிறார்.

இது குறித்து மாணவி கூறுகையில், “என்னுடைய மூன்று வயதில் பக்கத்து வீட்டார் என் மீது அமிலத்தை ஊற்றினார். பின்னர், மருத்துவர்கள் எனது உயிரை காப்பாற்றினர். ஆனால், அவர்களால் என்னுடைய பார்வையை கொண்டு வர முடியவில்லை.

என்னை காயப்படுத்தியவர்கள் தற்போது சுதந்திரமாக இருக்கின்றனர். அவர்களை சட்டத்திற்கு முன்பு கொண்டு செல்லவில்லை” என்றார்.