வவுனியா வைத்தியசாலையில் அவசர விபத்துச்சேவை பிரிவு : வடமாகாண சகாதார அமைச்சர்!!

325

Sathiyalingam

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் சாவகச்வேரி ஆதார வைத்தியசாலை என்பவற்றில் அவசர விபத்துச் சேவை வழங்குவதற்கான பிரிவுகள் ஆரம்பிக்கப்படுமென வடமாகாண சகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற வைத்திய நிபுணர்களுக்கான விடுதி திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது..

வடமாகாணத்தை ஊடறுத்து செல்லும் கண்டி யாழ் பிரதான வீதியில் கடந்த காலங்களில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளது. இதனால் பலரும் உயிர்களை மாய்த்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை தற்போது வைத்தியசாலைகளிலுள்ள வசதிகளை வைத்தே சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே கண்டி யாழ்ப்பாணம் பிரதான வீதியை அண்மித்ததாக அமைந்துள்ள வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை என்பவற்றில் அவசர விபத்துச்சேவை வழங்குவதற்காக பிரத்தியேக சிகிச்சை பிரிவுகள் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம் என்றார். எனினும் வாகனச் சாரதிகளும் பாதசாரிகளும் வீதி ஒழுங்குகளை சரியாக கடைப்பிடிப்பதினூடாகவே வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தமுடியும் என தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் வடமாகாணத்தில் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவர்கள் இரத்தமாற்று சிகிச்சைகளுக்காக தற்போது கண்டி அனுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு சென்றே வைத்திய சேவையை பெறவேண்டியுள்ளது.

இதற்காக பணச்செலவும் அவர்களிற்கு ஏற்படுகின்றது. இதனை கருத்தில்கொண்டு விரைவில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக இரத்தமாற்று சிகிச்சை நிலையமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.