சென்னையில் இலங்கைத் தமிழர்களின் கடவுச் சீட்டுக்கள் நடுவீதியில் : உரிமையாளர்களைத் தேடும் பொலிஸார்!!

697

PP

சென்னை அடையாறில் இலங்கைத் தமிழர்கள் 7 பேரின் கடவுச் சீட்டுக்கள் நடு வீதியில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாறு கஸ்தூரிபாய் தேஷ்முக் வீதியில், சத்யா ஸ்டூடியோ அருகில் நேற்று இரவு தனியார் நிறுவன ஊழியரான முகமது என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, வீதியில் கிடந்த பை ஒன்றினைக் கண்டுள்ளார்.

அதனைத் எடுத்துத் திறந்து பார்த்த போது அதில் இலங்கைத் தமிழர்கள் 7 பேரின் கடவுச் சீட்டுக்கள் இருப்பதை அவதானித்து, உடனே அந்தப் பையை அடையாறு பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.

குறித்த கடவுச் சீட்டுக்கள், ரவிச்சந்திரன், வடிவாம்பிகை, சாய் ஆர்.பி., கவுதமன், விசாகம், மற்றொரு வடிவாம்பிகை, ரவிச்சந்திரன் சண்முக ரத்தினசாமி என்ற பெயர்களில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடவுச் சீட்டுக்களை யாராவது மொத்தமாக வைத்திருந்து தொலைத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடையாறு பொலிஸ் துணை கமிஷனர் கண்ணன் தலைமையில் விசாரணைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து இலங்கை தமிழர்களை போலி கடவுச் சீட்டில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் கும்பல் பிடிப்பட்டது.

இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அடையாறு பகுதியில் யாராவது தங்க வைத்திருக்கிறார்களா அல்லது இவை போலி கடவுச் சீட்டுக்களா என்ற பல கோணங்களிலும் விசாரணை இடம்பெற்று வருவதாக தமிழக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.