கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி : தண்ணீர் தேடி அலையும் மக்கள்!!

861

கடந்த நாற்பது வருடகாலங்களில் கிளிநொச்சியில் வராலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. பசுமையும் குளிர்மையுமாய் கிடந்த சூழல் பாலைவனமென உருமாறிக் கொண்டிருக்கின்றது.
மனிதர்கள் தொடக்கம் கால்நடைகள் பறவைகள் வரை நீர்தேடி அலையும் காட்சி கிளிநொச்சி மாவட்டமெங்கும் விரிகின்றது.

வற்றாத கிணறுகள் வற்றிவிட்டன. இலங்கையின் புகழ்பூத்த இரணைமடு குளத்தின் வறட்சி காட்சி பார்ப்பவரை அச்சமும் கவலையும் கொள்ள வைக்கின்றது.

விவசாயமே தங்கள் வாழ்வாதாரம் என நம்பி இருந்த சமுதாயம் கவலையோடு வானத்தை பார்த்து ஏக்கப் பெருமூச்சுடன் காத்திருக்கின்றது. கிளிநொச்சி இப்பொழுது தண்ணீருக்கு ஏங்கும் ஊர். வரட்சியால் பெரும் சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளன.

கிளிநொச்சியின் பொருளாதார வளமெனவும் தங்கள் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்தில் வருமானம் தருமென கனவுகளோடு வைத்த தென்னம்பிள்ளைகள் கொத்துக்கொத்தாக ஒவ்வொரு காணியிலும் ஏக்கர் கணக்கில் அழிகின்றன. வாய்க்கால்கள் புழுதிபறக்கின்றது.

வயிறார மேய்ந்துவிட்டு வந்து வாய்க்கால்களில் ஓடும் நீரை தாராளமாக தாகம் தீர்க்கும் கால்நடைகளுக்கு இப்போது புல்லும் இல்லை வாய்க்கால்களில் தண்ணீரும் இல்லை. வறட்சியின் காட்சிகள் மனதை அதிர வைக்கின்றது. இதன் தொடர்விளைவுகள் எப்படி இருக்குமோ என ஏங்க வைக்கின்றது.

பா.உறுப்பினர் சி.சிறீதரன் இது தொடர்பாக கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருக்கு நேரடியாக வறட்சி தொடர்பான பாதிப்புக்கள் தேவைகள் தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.

20 21 22 23 24 25 26