கடந்த 12ஆம் திகதி பிரித்தானிய இளம் யுவதி ஒருவர் 46 கிலோ குஷ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, குறித்த யுவதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் சிறையிலிருந்து பேசுவது போல ஒரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில், தனது பயணப்பொதியில் போதைப்பொருள் இருந்தது தனக்கு தெரியாது எனவும் அதனை விமான நிலைய அதிகாரிகள் வெளியே எடுத்த போது தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ தினத்திற்கு முந்தைய நாள் இரவு தான் பேங்கொக்கில் இருந்ததாகவும் உடைகள் மற்றும் பொருட்களை ஏற்கனவே பொதி செய்து வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை யார் செய்திருப்பார் என தனக்கு தெரியும் எனவும் இது ஒரு திட்டமிட்ட சதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் தான் பணி புரிந்துகொண்டிருந்த நிலையில், அவருடைய 30 நாள் விசா முடிவடையவிருந்ததால், தாய் விசா புதுப்பிக்கப்படும் வரை காத்திருக்கும்போது அருகிலுள்ள இலங்கைக்குச் செல்ல முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது, நீர்கொழும்பு சிறையில் பூச்சிகள் நிறைந்த ஒரு கட்டிலில் தூங்க வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு அதிகாரி தன்னை பார்த்துக்கொண்டே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனக்கு காரம் நிறைந்த உணவை சாப்பிட முடியாது என்பதால் வேறு உணவை தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும், அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.