இந்திய ரூபாயை சர்வதேச மயமாக்க, இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இலங்கை மற்றும் பிற நாடுகளில் கடன் கோருவோருக்கு, குறித்த நாடுகளின் உள்ளூர் வங்கிகள் மற்றும் இந்திய வங்கிகளின் கிளைகளின் ஊடாக இந்திய நாணயத்தில் கடன் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த வங்கி மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இதன் காரணமாக, இந்திய ரூபாயின் பயன்பாடு மற்றும் ஏற்றுக்கொள்ளலை, சர்வதேச வர்த்தகத்தில் மேம்படுத்த முடியும் என்று, ரிசர்வ் வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் இந்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், அண்டை நாடுகளான பங்களாதேஸ், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில்,வெளிநாட்டினருக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம் என்று இந்திய மத்திய வங்கி யோசனை தெரிவித்துள்ளது.
எனினும் இந்திய நிதியமைச்சு இன்னும் இதற்கான ஒப்புதலை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய வர்த்தக அமைச்சக தரவுகளின்படி, தெற்காசியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 90 வீதமானவை, 2024-25 ஆம் ஆண்டில் இந்த நான்கு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் பெறுமதி கிட்டத்தட்ட 25 பில்லியன் டொலர்களாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகள், வெளிநாட்டு நாணயங்களில் கடன்களை வழங்குவதற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.