பிரித்தானியா பெண்ணால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் : இந்திய ஊடகம் அதிர்ச்சித் தகவல்!!

328

கடந்த 12ஆம் திகதி பிரித்தானிய பெண் ஒருவரினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

சந்தேக நபரான பெண்ணால் கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருள் மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பரவி வரும் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேங்கொக்கில் இருந்து இலங்கை வந்த பிரித்தானிய பெண்ணின் பைகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதை பொருள் தொடர்பில் இந்திய ஊடகமான NDTV தகவல் வெளியிட்டுள்ளது.

460 மில்லியன் ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள 46 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் 21 வயது சார்லோட் மே லீ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலுக்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான குஷ் போதைப்பொருள் இதுவாகும்.

பெண்ணிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மனித எலும்புகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது எனவும் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாகக் காணப்படும் மிகவும் அடிமையாக்கும் போதைப்பொருள் எனவும் NDTV வெளிப்படுத்தியுள்ளது.

இந்த போதைப்பொருள் பயன்பாடு காரணமாக சியரா லியோன் அரசாங்கம் கடந்த ஆண்டு அவசரகால நிலையை அறிவிக்க வேண்டியிருந்தது. ஏனெனில் இந்த போதை பொருள் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக NDTV மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த இளம் பெண், மிகவும் மோசமான வசதிகளுடன் இருப்பதாக டெய்லி மெயில் வலைத்தளம் வெளியிட்ட செய்தியின் காரணமாக சமீபத்தில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.