நடுவானில் உறங்கிய விமானியால் பாதை மாறிய விமானம் : நடுவானில் ஓர் அதிர்ச்சி சம்பவம்!!

663

Sleeping-pilot

மும்பையில் இருந்து பெல்ஜியத்திற்கு பறந்த விமானத்தில் விமானி உறங்கியதால், விமானம் பாதையை விட்டு 5,000 அடி கீழே பறந்துள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம், துருக்கி தலைநகர் அங்காரா மீது பறந்தபோது தானியங்கி முறைமையை இயக்கிவிட்டு விமானி தூங்கியுள்ளார்.

போயிங் ரகத்தைச் சேர்ந்த அந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் பாதையைவிட்டு விலகிய போது, உடனிருந்த பெண் துணை விமானி விமானத்தின் கொக்பிட்டில் இருக்கும் கணனியில் விமானம் குறித்த தகவல்களை பார்த்துக் கொண்டிருந்ததாலும் இருவரும் அதனை கவனிக்கவில்லை.

ஜெட் ஏர்வேஸ் தவறாகப் பறந்த உயரத்தில் ஏற்கனவே இன்னொரு விமானம் பறக்க ஒதுக்கப்பட்டிருந்துள்ளது.ஆனால், அந்த நேரத்தில் அந்த விமானம் எதிரே வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமானம் தனக்கு ஒதுக்கப்பட்ட 34,000 அடி உயரத்தை விட்டுவிட்டு 5,000 அடி குறைவாகப் பறந்ததை கண்காணித்த அங்காரா தரைக்கட்டுப்பாட்டு மையத்தினர், உடனடியாக விமானத்தைத் தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து விமானியை எழுப்பிய துணை விமானி எச்சரிக்கையை கூறியதும், அவர் உடனடியாக செயல்பட்டு விமானத்தின் உயரத்தை அதிகரித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை விமானிகள் இருவரும் ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகளிடமோ, இந்திய விமானக் கட்டுப்பாட்டுத்துறையிடமோ தெரிவிக்கவே இல்லை.

அதே போல இதை துருக்கி விமானக் கட்டுப்பாட்டுறையும் இந்தியாவிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்திய விமானப் போக்குவரத்துத்துறையின் இணை இயக்குனர் ஜெனரலுக்கு, இதுகுறித்து முழு விவரத்துடன் மர்ம குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விமானியையும், துணை விமானியையும் அழைத்து விசாரித்ததில், இருவரும் நடந்த சம்பவத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, விசாரணை முடியும் வரை இரு விமானிகளும் விமானங்களை இயக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தானியங்கி முறைமை அமலில் இருந்தோது விமானம் ஏன் 5,000 அடி உயரம் குறைய ஆரம்பித்தது என்ற விசாரணையும் நடக்கிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து ஏன் இருவரும் உரிய விவரத்தை தாக்கல் செய்யவில்லை, என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.