
யாழ்ப்பாணத்துக்கான ரயில்வே பாதையை ஒக்டோபர் நடுப்பகுதியில் முழுமையாக அமைத்துவிடமுடியும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரி எஸ் டி மூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரதின கொண்டாட்டங்கள் நேற்று இடம்பெற்ற போது உரையாற்றிய அவர் 1980 ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட யாழ்தேவி ரயில் வடக்குக்கும் தெற்கும் முக்கிய இணைப்பு பங்கை வகிக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்தியா வடக்கில் இதுவரை 14,514 வீடுகளை அமைக்க உதவியிருக்கிறது. இந்த வருடத்துக்குள் 19,703 வீடுகள் அமைக்கப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை தமிழ் நாட்டுக்கும் வடக்குக்கும் உள்ள உறவை பேணும் வகையில் முதல் தடவையாக சுதந்திர தின நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அதிதிகளுக்கு இட்லி, கேசரி, வடை என்பன பரிமாறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மூர்த்தி, தமிழகம், திருச்சி மாவட்ட மணப்பாறையை சேர்ந்தவராவார்.





