வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஏறாவூர் நகர சபைக்கு பயிற்சி சுற்றுலாவில் விஜயம்!!

817

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் களப் பயிற்சி சுற்றுலா நிமித்தம் நேற்று (15.08) வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகர சபைக்கு விஜயம் செய்தனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தலைவர் ரீ.நடராஜசிங்கம், உறுப்பினர்களான பி. தருமலிங்கம், கே.பரமேஸ்வரன், பிரதம முகாமை உதவியாளர் சோதிநாயகி மணிவண்ணன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வாஜிபா ஜுனைட், பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தர் கே.சிவலோஜினி, உள்ளுராட்சி உதவியாளர் எம்.சுரேந்திரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட 31 பேர் இந்த பயிற்சிக்கள விஜயத்தை மேற்கொண்டு ஏறாவூர் நகரசபையின் முன்மாதிரியான திட்டங்களைப் பார்வையிட்டதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பிரதம முகாமை உதவியாளர் சோதிநாயகி மணிவண்ணன் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையால் அமுல்படுத்தப்படும் வருமான மேம்பாட்டு செயல்திட்டம், உற்பத்தித் திறன் செயற்திட்டம், அலுவலக கட்டமைப்பும் ஒழுங்கமைப்பும், வாவிக் கரையோர சிறுவர் பூங்கா, பொழுது போக்கிடம், நவீன மயப்படுத்தப்பட்டுப் பூந்தாவரங்கள் கொண்டு பராமரிக்கப்படும் ஏறாவூர் புன்னைக்குடா வீதி என்பனவற்றுடன் 50 மில்லியன் ரூபாய் செலவில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் ஏறாவூர் நகர சபைக்கான நவீன கட்டிடம் என்பனவற்றையும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பார்வையிட்டதாக ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.

பரஸ்பர நட்புறவைக் குறிக்கும் முகமாக ஏறாவூர் நகர சபையினால் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரிடம் நினைவுப் படிகமும் கையளிக்கப்பட்டது.

இந்த கல்விச் சுற்றுலா கள விஜயத்தின் போது ஏறாவூர் நகர சபையின் உபதவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம், உறுப்பினர்களான எம்.எல். ரெபுபாசம், ஐ. பாஸித் மற்றும் நகர சபையின் ஏனைய உத்தியோகத்தர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

1 2 3 4 5