ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கருகில் தனிநபர் ஒருவரின் காணியை பொலிசார் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தலையீட்டினையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஓமந்தையில் இடம்பெற்ற இவ்விடயம் தொடர்பில், நேற்றைய தினம் (02.07.2025) இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் பொலிசார் மற்றும் அபிவிருத்திக்குழு தலைவரிடம் கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஏ9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இது அமைந்துள்ளது. குறித்த காணியை நேற்று முன்தினம் (30.06) துப்புரவு செய்துள்ளனர்.
குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும் அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது.
எனினும் குறித்த காணிக்கு உரிமை கோரும் நபர் இக்காணி தனக்குரியதானது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே பொலிசார் காணியை துப்பரவு செய்துள்ளனர்.
அத்துடன், தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியாகும். அதற்கு பதிலாக ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு பின்பாக பொலிஸ் நிலையத்திற்கென ஏற்கனவே காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள காணியில் இருந்து பொலிசார் இதுவரை வெளியேறாத நிலையில் புதிதாக இன்னுமொரு காணியையும் அடாத்தாக கையகப்படுத்தும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து பொலிசாருடன் இடம்பெற்ற நீண்ட வாதப்பிரதிவாதங்களின் பின் காணி கையகப்படுத்தப்படும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச ஒருங்கினைப்புக்குழுவால் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் களஆய்வொன்றினை அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் தலைமையில் மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.