தேசிய அரச கரும மொழிகள் வாரம் ஜூலை 1 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை வவுனியா மற்றும் கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு அரச கரும மொழிகள் தினம் வாரத்தை நடை முறைப்படுத்துகிறது.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் அரச கரும மொழிகள் தினம் வவுனியா மாவட்டச் செயலாளர் சரத் சந்திர தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (03.07.2025) காலை 9 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டமையுடன் அரச கரும மொழிகள் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மாணவர்களின் வரவேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பமானதுடன் தமிழ் சிங்கள கலச்சார நடனம், சித்திர போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கல், அதிதிகள் உரை, சிங்கள /தமிழ் பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.