மஹேலவுக்கு தங்கத் துடுப்பு வழங்கி ஜனாதிபதி கெளரவம்!!

500

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தமது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அவருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கொழும்பு எஸ். எஸ். ஸி. மைதானத்திற்கு நேற்று திடீரென விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த மஹேல ஜயவர்தனவை வாழ்த்தியதுடன் அவருக்குத் தங்கத் துடுப்பொன்றையும் பரிசளித்தார்.

தாய்நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பெற்றுக் கொடுத்துள்ள புகழுக்கும் பெருமைக்கும் தமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்காலத்தில் தேவையான சகல உதவிகளையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக் கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் இலங்கை 105 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியை நேரடியாகக் கண்டுகளித்த ஜனாதிபதி வெற்றிக்களிப்புடன் மைதானத்திலிருந்து வெளியேறிய துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தனவை கைலாகு கொடுத்து வரவேற்று வாழ்த்தினார்.

தொடரை வெற்றிகொண்ட இலங்கை கிரிக்கெட் அணியை வாழ்த்திய ஜனாதிபதி, நினைவுச் சின்னமாக மஹேல ஜயவர்தனவுக்கு தங்கத் துடுப்பொன்றை வழங்கி கெளரவித்தார்.

மஹேல ஜயவர்தன மொத்தம் 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதங்கள், 50 அரைச்சதங்களை பெற்றதுடன் 11,814 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. எச். எம். அஸ்வர், ஸ்ரீரங்கா, இலங்கை கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜயந்த தர்மதாச, செயலாளர் நிசாந்த ரணதுங்க போன்றோரும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

M2 Mahinda