ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!!

47

ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன், தொண்டையில் விதை சிக்கி மூச்சு திணறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெல்லை, மேலப்பாளையத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நிஜாம் (35). வெளிநாட்டில் வேலைப் பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதில் ரியாஸ் என்ற மகனும் இருந்தனர்.

சிறுவன் ரியாஸ், அருகே உள்ள ஒரு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இரவில் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்காக ரம்புட்டான் பழங்களை வாங்கி உள்ளனர்.

அதில் ஒரு பழத்தை ரியாஸ் எடுத்து சாப்பிட்டான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பழத்தின் விதை சிறுவனின் தொண்டையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவனை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ரியாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறி துடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற பழங்கள் வழுவழுப்பாக இருப்பதால் தொண்டையில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குழந்தைகள், முதியவர்கள் ரம்புட்டான் பழத்தை கவனமுடன் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.