வவுனியா வெடிவைத்தகல்லில் 1000 ஏக்கர் வனப் பகுதியை அழித்து ஆக்கிரமிப்பு முயற்சி : நேரில்சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி!!

528

வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வெடிவைத்தகல் கிராமஅலுவலர் பிரிவில் திரிவைத்தகுளத்தின் கீழான தமிழ் மக்களின் வயல்நிலங்கள் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், மகாவலி (எல்) திட்டத்தினூடாக சுமார் 1000 ஏக்கர் வரையான பாரிய வனப்பகுதிகளும் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், இதுதொடர்பில் அப்பகுதிக்குரிய வனவளத் திணைக்கள உத்தியோகத்தருடனும், வவுனியா வடக்கு பிரதேச செயலருடனும் கலந்துரையாடியுள்ளார்.

அதேவேளை இந்த ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வெடிவைத்தகல் கிராமஅலுவலர் பிரிவில், திரிவைத்தகுளம்பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களால் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன்,

மகாவலி (எல்) வலயத்திட்டத்தினூடாக பாரிய வனப்பகுதிகளும் பெரும்பான்மை இனத்தவர்களால் பெருமளவில் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்புச்செயற்பாடுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பகுதியை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இந் நிலையில் தமிழ் மக்கள் பூர்வீகமாக பயிற்செய்கை மேற்கொண்டுவந்த திரிவைத்த குளம் பகுதியை முற்றாக அபகரித்துள்ள பெரும்பான்மையினத்தவர்கள் அங்கு நெற்பயிற்செய்கை மேற்கொண்டுவருவதை நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.

அத்தோடு மகாவலி (எல்) வலயத் திட்டத்தினூடாக திரிவைத்தகுளம் பகுதியை அண்டியுள்ள பாரிய வனப்பகுதிகளில், சுமார் 1000 ஏக்கர் வரையில் பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோத காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு அபகரிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகப் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து இது தொடர்பில் வனவளத் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும், வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் ஆகியோரையும் நாடிளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

மேலும் இதுதொடர்பில் உரிய அமைச்சுக்களுடனும் பேசுவதுடன், பாராளுமன்றிலும் இந்த விடயம் தொடர்பில் வெளிப்படுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

குறித்த களவிஜயத்தில் வன்றிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன், சமூகசெயற்பாட்டாளர் பூபாலசிங்கம், வெடிவைத்தகல்லு கிராம மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.