வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பான எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் இடையில் எவ்வித தொடர்பாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு சிறிது சிறிதாக மீட்சிப் பாதையில் செல்வதால், சில வருடங்களின் பின்னர் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதில் இருந்து ஜூன் மாதம் இறுதி வரை கிட்டத்தட்ட 18,000 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவற்றில், குறித்த காலகட்டத்தில் 13,614 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த தீர்மானித்திருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், அவ்வாறான எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கி திறைசேரிக்கு எந்த ஆலோசனையோ அல்லது பரிந்துரையோ வழங்கவில்லை என்று மத்திய வங்கியின் மூத்த அதிகாரியொருவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.