இந்தியாவின் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடருந்து கடவையை கடக்க முயன்ற பாடசாலை பேருந்து மீது தொடருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடருந்து கடவையை கடக்க முயன்ற தனியார் பாடசாலைக்கு சொந்தமான பாடசாலை பேருந்தின் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தொடருந்து கடவையை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் பேருந்து தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடருந்து மோதியதில் பாடசாலை பேருந்து 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.