விபச்சாரத்தை விட்டால் வேறு கதி இல்லை : திருநங்கைகளின் குமுறல்!!

1207

tran

சமுதாயத்தில் தங்களுக்கு மதிப்பில்லாததும் எந்த வேலையும் கிடைக்காமல் இருப்பதாலும் விபச்சாரத்தில் விழுவதாக தமிழகத்தை சேர்ந்த திருநங்கைகள் கண்ணீருடன் கூறியுள்ளனர்.

இதுகுறித்து 30 வயது நிரம்பிய திருநங்கை ஒருவர் கூறியதாவது, நான் திருநங்கை என்பதை உணர்ந்ததுமே என் வீட்டை விட்டு வந்து விட்டேன். எனக்கு உதவவோ, என்னை படிக்க வைக்கவோ யாரும் இல்லை. பசி என்னை வாட்டி எடுத்தது. ஆனால் சாப்பிடக் கூட வழியில்லை. எனக்கு படிப்பறிவு இல்லாததால் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே விபச்சாரத்திற்கு வந்துவிட்டேன்.

நான் மட்டும் அல்ல என்னை போல் உள்ள பிற திருநங்கைகளும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இத்தொழிலுக்கு வருவதில்லை. வேறு வழியின்றி கட்டாயத்தினால் தான் விபச்சாரத்தில் தள்ளப்படுகிறோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் திருநங்கைகள் சற்று மனது வைத்தால் அவர்களும் மற்றவர்களைப் போல சமூகத்தில் வாழ முடியும் என்பது தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவரின் கூற்றாக உள்ளது.

திருநங்கைகள் இணைந்து தங்களுக்குத் தெரிந்த தொழிலை கூட்டாக செய்து, அதன் மூலம் அவர்களும் மற்றவர்களைப் போல் சம்பாதிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த மற்றொரு திருநங்கை கூறுகையில், சமூகம் எங்களை ஏற்றுக் கொள்ளவே இல்லை. வீடு கூட வாடகைக்கு தர மறுக்கின்றனர். பிறகு எப்படி இது சாத்தியமாகும்.
ஆதலால் சமூகம் முன்வந்து உதவி புரிந்தால் மட்டுமே எங்களது அவலங்களுக்கு ஒரு விடிவு பிறக்கும் என தெரிவித்துள்ளார்.