வவுனியா மாநகரசபைக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே முறுகல் நிலமை!!

1943

வவுனியா நகரை அழகுற மாற்றுவதுடன் நகரின் போக்குவரத்து, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றினை கருத்தில் கொண்டு வவுனியா மாநகரசபையினால் கடந்த சில வாரங்களாக நடைபாதை வியாபாரம், வர்த்தக நிலையத்திற்கு மேலதிக கூரைகள், அனுமதியற்ற விளம்பர பலகைகள் போன்றன அகற்றப்பட்டு வந்தன.

அந்த வகையில் வவுனியா இலுப்பையடி சந்தி, வைத்தியசாலை வீதி ஆகியவற்றில் நடைபாதையில் கொட்டகை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை அவ்விடத்திலிந்து அகன்று போலிஸ் நிலையம் முன்பாக அல்லது மாநகரசபை முன்பாக அமைந்துள்ள மாநகர சபைக்கு உரித்தான வளாகத்தில் வியாபாரத்தில் ஈடுபடுமாறு மாநகரசபை அறிவித்தல் வழங்கியிருந்தமையுடன்,

கடந்த திங்கட்கிழமை அவர்களுடன் மாநகரசபையினர் கலந்துரையாடி இன்று 14.07.2025ம் திகதிக்கு முன்பாக நடைபாதை வியாபாரங்களை அகற்றுமாறும் கால அவகாசம் வழங்கியிருந்தமையுடன் இதற்கு முன்னரும் பல தடவைகள் நடைபாதை வியாபாரத்தினை அகற்றுமாறு தெரிவித்திருத்தமையும் மாநகரசபையினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் இன்றையதினம் (14.07.2025) பொலிசார் சகிதம் மாநகரசபையினர் குறித்த இடத்திலுள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு சென்றிருந்தனர்.

இதன் போது குறித்த நடைபாதை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டமையுடன் குறித்த வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் மாநகரசபையினர் குறித்த நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றமுற்பட்ட சமயத்தில் மாநகர சபையினருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முறுகல் நிலமைக்கு சென்றது. அதன் பின்னர் பொலிசார் தலையிட்டு முறுகல் நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் பொலிசார் மாநகர முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக நடைபாதை வியாபார இடங்களை அகற்றுவதற்கு இன்று இரவு வரை காலஅவகாசம் வழங்கப்பட்டதுடன் குறித்த நடைபாதை வியாபாரிகளின் கொட்டகைளை அகற்றுவதற்கு மாநகரசபை ஊழியர்களின் ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.

அவ்விடத்திலிருந்த சில நடைபாதை வியாபார கொட்டகைகளை வியாபாரிகள் உடனே அகற்றியிருந்தமையுடன் ஏனைய நடைபாதை வியாபார கொட்டகைகள் வியாபாரிகளினால் அகற்றப்பட்டு மாநகர சபையினரினால் ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது.