
வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் தொடர்பாக பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். அங்கு பல பிரச்சனைகள் உள்ளது. இதனை அரசியல் ஆக்குவது பர்ஸ்சான் தலைமையிலான அரசியல் கட்சியே என்று வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள மாடு அறுக்கும் மடுவத்தில் தற்போது ஏற்ப்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக கருத்து கேட்டபோதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..
மின்சாரசபையால் இதுவரை அனுப்பப்பட்ட பட்டியலுக்கு அமைய திங்கள்கிழமை நிலுவையிலுள்ள மின்கட்டணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அந்த செயற்பாடுகளை சபையின் நிர்வாக அதிகாரியே செய்கின்றார். இதனை அரசியல் ஆக்குவது பர்ஸ்சான் தலைமையிலான அரசியல் கட்சியே.
தாண்டிக்குளம் மாடு அறுக்கும் மடுவத்தில் அதிகமான மாடுகள் அறுக்கப்படுகின்றது. அவை வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதால் எமது மாவட்டத்தில் மாடுகளின் விலை அதிகரித்துள்ளது.
கால்நடைகளுக்கு தட்டுப்பாடும் நிலவுவதுடன் களவாடப்படுகின்றது. அண்மையில் கூட ஓமந்தையில் ஒருவருக்கு சொந்தமான 20 மாடுகள் களவாடப்பட்டுள்ளது. எனவே இவற்றை தடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.
அத்துடன் மடுவத்தில் அறுக்கப்படும் ஒருகிலோ மாட்டு இறைச்சிக்காக சபைக்கு 10 ரூபாவே கட்டணமாக செலுத்தப்படுகின்றது. கடந்த 25 வருடங்களாக இந்த தொகையே அறவிடப்படுகின்றது. ஆனால் தேறிய இலாபமாக குறைந்தது கிலோக்கு 800ரூபாயை அவர்கள் பெறுகின்றனர்.
எனவே இவற்றை திருத்தி சபையின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்தவகையில் பர்ஸ்சானின் நடவடிக்கை தொடர்பாக மாநகரசபையின் அடுத்த அமர்வில் கூடி கலந்துரையாடப்பட்டு ஒழுக்காற்று முடிவுகள் எடுக்கப்படும்.
ஒரு மாநகரசபை உறுப்பினர் சபையின் வியாபாரத்தை தன்னுடையது என்று சொல்லி செய்யமுடியாது. சபை உறுப்பினராக சத்தியபிரமாணம் எடுக்கும் முன்னரே அவர் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுத்திருக்க வேண்டும். எனவே அவர் மக்களுக்காக அல்ல மாடுகளை வெட்டுவதற்காகவே மாநகரசபைக்கு வந்துள்ளாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது என்றார்.





