
வவுனியா மாநகரசபை நிர்வாகம் தொடர்ச்சியான பழிவாங்கலை மேற்கொண்டு தொழில்செய்வதற்கு இடையூறை ஏற்ப்படுத்துவதாக இலங்கை தொழிலாளர் கட்சியின் வவுனியா மாநகரசபை உறுப்பினர் பாருக் பர்ஸ்சான் குற்றம்சாட்டியுள்ளார்.
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட மாடு அறுக்கும் மடுவம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..
கடந்த மூன்று நாட்களாக மடுவத்திற்கான மின்சாரம் வழங்கப்படவில்லை. அரசியல் பழிவாங்கல் அடிப்படையிலேயே இவ்வாறு செய்யப்படுகின்றது. இதனால் எமது தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுகிழமை அதிகமான வியாபாரம் செய்யக்கூடிய ஒரு நாள். ஆனால் இன்று இறைச்சிக்கடைகள் அனைத்தையும் மூடவேண்டிய அவல நிலைக்கு வந்துள்ளோம்.
மாவட்டத்தில் உள்ள உணவகங்களுக்கும் இறைச்சியினை வழங்கமுடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் இப்படியான ஒரு பிரச்சனை வந்ததில்லை. இதனை நம்பி தொழில் செய்யும் பல ஊழியர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு சரியான நீதியான தீர்வு வழங்கப்படவேண்டும்.
கடந்த தேர்தலில் எனது வட்டாரத்தில் எனக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மாநகரசபை உறுப்பினர்களான லறீப், பாரி ஆகிய இருவரும் இணைந்தே எமது தொழிலை இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் பலமுறை மடுவத்திற்குள் வந்து எம்மை தொந்தரவு செய்கின்றனர். எனவே மாநகரசபை சரியான ஒரு முடிவினை எனக்கு தரவேண்டும் என்றார்.





