யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

665

உலகம் முழுவதும் இயந்திரகதியாகி இருக்கும் நிலையில், பலரும் கூகுள் டாக்டர்களையும், யூ-ட்யூப் வீடியோக்களையும் அப்படியே நம்பி வருகின்றனர். வியூவ்ஸ்களை அள்ளுவதற்காக இந்த உணவகத்தில் உணவு வேற லெவல் என்பதில் துவங்கி,

சித்த மருத்துவ குறிப்புகள் வரையில் வாய்க்கு வந்ததை பலரும் வீடியோக்களாக பதிவிட்டு பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதை உண்மை என்று நம்பி பலரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக, மாணவர் எந்தவிதமான திட உணவு வகைகளையும் சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மகன் சக்தீஷ்வர் (17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார்.

தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார்.

எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வந்துள்ளார்.

அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.