வவுனியா மாநகரசபை மாட்டுத் தொழுவத்தில் ஒரு மாதத்தில் மாத்திரம் 801 மாடுகள் இறைச்சிக்காக அறுப்பு!!

1821

வவுனியா மாநகரசபையின் மாடு வெட்டும் தொழுவத்தில் ஒரு மாதத்தில் மாத்திரம் 801 மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான ஆவணம் வெளியாகியுள்ளது.

கடந்த 5ம் மாதத்தில் மாநகரசபையின் மாடு வெட்டும் தொழுவத்தில் வவுனியா நகரத்திற்கு என 172 மாடுகளும், கொழும்புக்கு என 602 மாடுகளும், குருமன்காட்டிற்கு என 27 மாடுகளும் என மொத்தமாக 5ம் மாதத்தில் மாத்திரம் 801 மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளமையுடன் வவுனியா நகரத்திற்கு என 34 ஆடுகளும் அறுக்கப்பட்டுள்ளன.

எனவே பிரதேச தேவைக்கு 199 மாடுகளும் வெளிமாவட்டத்திற்கு 602 மாடுகளும் இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேவைக்கேன குறைந்தளவிலான மாடுகளே இறைச்சிக்காக அறுக்கப்படுகின்றது. வெளிமாவட்ட தேவைக்கென அதிகளவில் மாடுகள் அறுக்கப்படுவதனால் மாவட்டத்தின் மாடுகளின் எண்ணிக்கை குறைவடைந்து பால் உற்பத்தியும் கேள்விக்குறியாகும் நிலமை உருவாகியுள்ளது.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தினை கருத்தில் கொண்டு பாலின் உற்பத்தியினை அதிகரிக்கவும் பாலின் விலையினை குறைக்கவும் வழிமுறைகளை ஏற்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த மாட்டுத்தொழுவத்தில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் மாநகரசபையினரின் சுகாதாரக் குழு திடீர் விஜயம் ஒன்றினை முன்னெடுத்து மாட்டுத்தொழுவத்திற்கு சென்றிருந்தனர்.

இதன் போது சுகாதார பரிசோதகரின் அனுமதியினை மீறி அதிகளவில் மாடு வெட்டப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமையுடன் சுகாதார சீர்கேட்டுடன் குறித்த பகுதி காணப்பட்டமை தொடர்பிலான சர்ச்சைகளுக்கு மத்தியில் இவ் ஆவணம் வெளியாகியுள்ளது.