வவுனியா பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தினை விடுவிக்குமாறு கோரியுள்ள மாநகரசபை!!

4779

வவுனியா தலைமை பொலிஸ்நிலையம் அமைந்துள்ள முழு ஆதனத்தினையும் விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்தார்.

வவுனியா மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் நேற்று (31.07.2025) இடம்பெற்றது. இதன்போது கடந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வரால் தெளிவுறுத்தப்பட்டது.

அந்தவகையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள மாநகரசபைக்கு சொந்தமான காணியை விடுவிப்பது தொடர்பாக கடந்த அமர்வில் பேசப்பட்டிருந்தது.

அது தொடர்பாக பதில் அளித்த முதல்வர் வவுனியா பொலிஸ் நிலையம் அமைந்துள்ள முழு ஆதனத்தினையும் விடுவித்து மாநகரசபைக்கு வழங்குமாறு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளதாக சபைக்கு தெரிவித்திருந்தார்.