
நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியைக் கணவன் குத்திக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் செயின் கபீர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39). லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு 7 வயதில் மகள் உள்ள நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் குடித்து விட்டு தினமும் மனைவி லட்சுமியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதையடுத்து சந்தோஷைப் பிரிந்து, லட்சுமி தனது மகளுடன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டு, அங்கிருந்தபடியே விவாகரத்துக் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில், விவாகரத்துக் கோரி லட்சுமி தொடர்ந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லட்சுமி தனது மகளை அழைத்து வந்திருந்தார். சந்தோஷூம் கோர்ட்டிற்கு வந்திருந்த நிலையில் விவாகரத்து வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
திடீரென சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகள் கண்முன்னே கோர்ட்டு வளாகத்தில் மனைவி லட்சுமியை சரமாரியாக குத்திவிட்டார்.
இதில் லட்சுமியின் முகம், வயிற்றுப்பகுதியில் கத்திக்கு சரமாரியாக பாய்ந்ததில், ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த கோர்ட்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். உடனடியாக லட்சுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். லட்சுமிக்கு 2 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே நேரத்தில் லட்சுமியை குத்திக் கொன்று விட்டு தப்பியோட முயன்ற சந்தோஷைப் பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். சந்தோஷைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.





