
மும்பையிலிருந்து கொல்கத்தாவுக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர், மற்றொரு பயணியை தாக்கியுள்ள நிலையில் பயணத்தின் போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட குறித்த நபர், விமான பயணத்தின் பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஹுசைன் அகமது மஜும்தார் என்ற பயணி, ஜூலை 31ஆம் திகதி மும்பையிலிருந்து கொல்கத்தா வழியாக சில்ச்சாருக்குப் பயணம் செய்துள்ளார்.
அவர் சில்ச்சாரை அடைய வேண்டியிருந்ததாகவும், ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்றும், அதன் பிறகு அவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விமானத்தில் ஹுசைன் அகமது மஜும்தார் என்ற பயணியை ஒரு நபர் திடீரென அறைந்து தாக்கியுள்ளார்.
இதன்போது தாக்கப்பட்ட பயணி பீதியில் இருந்ததாகவும் தாக்குதலுக்கு பின்னர் அவருக்கு மூச்சு பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது விமான பணிப்பெண்கள் குறுக்கிட்டு தகராறை தடுத்துள்ளனர். இச்சம்பவம் பதிவான காணொளியும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
அதேவேளை, சம்பவத்தின் பின்னர் தாக்கப்பட்ட நபர் காணாமல் போயுள்ளதாகவும் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





