வவுனியாவில் பிடிபட்ட மாட்டிறைச்சி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

2529

வவுனியாவில் பேருந்தில் எடுத்து வரப்பட்ட சட்டவிரோத மாட்டிறைச்சி தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மூவருக்கும், மாட்டிறைச்சியினை கிளிநொச்சியிலிருந்து அனுப்பி வைத்தவருக்கும் எதிராகவும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி வவுனியாவிற்கு சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட 558.5 கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் கடந்த (04.08.2025) அன்று மாலை கையகப்படுத்தப்பட்டமையுடன்,

குறித்த இறைச்சினை ஏற்றிச்செல்ல முற்பட்ட இரு முச்சக்கரவண்டியும் மாநகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இதனுடன் தொடர்புபட்ட மூவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளை முன்னெடுத்த மாநகர சுகாதார பிரிவினர் மாட்டிறச்சியினை பேரூந்தில் எடுத்து வந்தவர், மாட்டிறைச்சியினை ஏற்ற பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதி இருவர் என மூவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் (05.08.2025) ஆஜர்படுத்தினர்.

இதன் போது மாட்டிறைச்சியினை பேரூந்தில் எடுத்து வந்தரை 14 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறும் முச்சக்கரவண்டி சாரதி இருவரையும் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் கிளிநொச்சியிலிருந்து மாட்டிறைச்சியினை வழங்கியவருக்கு நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்டு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.