திருமணத்திற்கு சம்மதிக்காத பெற்றோர் : காதலன் காதலி இருவரும் எடுத்த விபரீத முடிவு!!

719

காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையில், காதலன் தற்கொலைச் செய்துக் கொண்டதால் விரக்தியில் அதே தேதியில் காதலியும் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி புஷ்பம். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 11 வருடங்களுக்கு முன்பு செல்லத்துரை உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் புஷ்பத்தின் 3 மகள்கள் காதலித்து திருமணம் கொண்டனர். இதனால் அவரது கடைசி மகள் வித்யா (23) மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

வித்யா அருகில் உள்ள தென்னைநார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த கம்பெனியில் பணியாற்றிய மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அருணை காதலித்ததாக தெரிகிறது. இவர்களுடைய காதலை பெற்றோரை இழந்த அருணின் உறவினர்கள் ஏற்க மறுத்தனர்.

இதனையடுத்து கடந்த ஜூலை 5ம் தேதி வீட்டில் அருண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து வித்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் வித்யா வீட்டில் சமையல் வேலைகளை முடித்து விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் கழிவறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு கழிவறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் வித்யா தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக உறவினர்கள் வித்யாவை மீட்டு குளச்சல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், வித்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் சென்ற மாதம் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல், அதே தேதியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.