டோனிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எச்சரிக்கை!!

242

DHONI

பயிற்சியாளர் பிளட்சருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட டோனிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டி தொடரில் 1–3 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது.

இதனை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக முன்னாள் அணித்தலைவர் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். ரவிசாஸ்திரி அணியின் ஒட்டுமொத்த பணிகளை கவனிப்பார் என்றும், அவரிடம் தலைமை பயிற்சியாளர் பிளட்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கு முன்னர் அணித்தலைவர் டோனி ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டார்.

பிளட்சரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும். இன்னும் அவர் தான் எங்களுக்கு தலைவராக இருக்கிறார். ரவிசாஸ்திரி எல்லா விஷயங்களையும் மேற்பார்வையிடுவார்.

ஆனால் பிளட்சர் தான் தலைமை பயிற்சியாளர். அவரது அதிகாரம் குறைக்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை. வெளியில் இருந்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அணிக்குள் அவர் முன்பு போல் தொடருகிறார்.

களத்தடுப்பாளர்கள் கேட்ச்சை கோட்டை விட்டதற்காக உதவி பயிற்சியாளர்களை மாற்றியது கடினமான முடிவு தான். புதிய உதவி பயிற்சியாளர்களை வரவேற்கிறோம். அவர்கள் என்ன மாதிரியான மாற்றத்தை தருகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் என்று அதிகார தோரணையுடன் கூறியிருந்தார்.

பயிற்சியாளர் குறித்து டோனி தெரிவித்த கருத்துக்கள் இந்திய கிரிக்கெட் சபை நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து அடுத்து நடைபெற இருக்கும் இந்திய கிரிக்கெட் சபை செயற்குழுவில் விவாதித்து முடிவு எடுக்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபையின் முக்கிய நிர்வாகி ஒருவர் டோனியை கடுமையாக எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

டோனி தனது எல்லையை மீறி நடந்து இருக்கிறார். பயிற்சியாளரின் பதவி காலம் குறித்து முடிவு செய்வதில் அவருக்கு எந்த வேலையும் கிடையாது. நடந்த சம்பவங்கள் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணியின் தலைவர் போல் டோனி நடக்கவில்லை.

இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் சபையின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்திய அணியின் தலைவர் யார் என்று கருத்து தெரிவிப்பது டோனியின் அதிகார வரம்புக்கு உட்பட்டது கிடையாது.

முதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் வீரரான அவர் தனது எல்லைக்கோட்டை அறிந்து செயல்பட வேண்டும். ஆடும் லெவன் அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதை இந்திய கிரிக்கெட் சபை எப்படி முடிவு செய்ய முடியாதோ அதேபோல் அணியின் நிர்வாகிகள் எவ்வளவு காலம் நீடிப்பார்கள் என்பதை அணித்தலைவர் டோனி முடிவு செய்ய முடியாது. அணியின் உதவியாளர்களை தேர்வு செய்யும் பணி அவரது அதிகாரத்துக்குள் வராது என தெரிவித்துள்ளார்.