வவுனியா உட்பட வடகிழக்கு இராணுவப்பிரசன்னத்தை அகற்ற பொது முடக்கத்திற்கு ஆதரவு தாருங்கள் : செந்தில்நாதன் மயூரன்!!

1506

எதிர்வரும் திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

போர் முடிவுற்று 16 வருடங்கள் கடந்த போதும் வடகிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை. அவர்களின் பிரச்சன்னமும் குறைக்கப்படவில்லை. மாறாக பொதுமக்களின் காணிகளை கபளீகரம் செய்த அவர்கள் அங்கு நிலையான இராணுவ கட்டுமானங்களை அமைத்தனர்.

அந்தகாலம் தொட்டு தமிழ்மக்களின் அன்றாட வாழ்வில் இராணுவத்தின் தலையீடனாது பல்வேறு பாதிப்புக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. அவ்வாறான ஒரு சம்பவமே கடந்தவாரம் முல்லைத்தீவு முத்தையன் கட்டுபகுதியிலும் இடம்பெற்றுள்ளது.

தமிழர்தாயக பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி மக்களின் சுதந்திரமான வாழ்வுரிமையை உறுதிப்படுத்தவேண்டிய நிலைமையை ஆட்சிக்குவந்த பேரினவாத அரசுகள் சிறிதளவேனும் செய்யவில்லை.

தொடர்ச்சியாக அதிகாரவர்க்கமானது தமிழ்மக்களை அடிமை மனோநிலையில் நடாத்துகின்ற இந்த நிலைக்கு வடகிழக்கு மக்கள் தமது பூரண எதிர்ப்பை காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அந்தவகையில் தமிழர்தாயக பகுதிகளில் இடம்பெறும் அதிகாரவர்க்கத்தின் எதேச்சியதிகாரப்போக்கிற்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை(18) அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு தமிழ்மக்கள், தங்களது பூரண ஒத்துழைப்பை நல்கி சர்வதேச சமூகத்திற்கும்,அரசுக்கும் எமது நிலைப்பாட்டை உறுதிபடவெளிப்படுத்த வேண்டும் என்று குறித்த அறிக்கையில் உள்ளது.