வவுனியாவில் இயல்புநிலை : சில செயற்ப்பாடுகள் ஸ்தம்பிதம்!!

1247

வடகிழக்கு தழுவிய ரீதியில் இன்று(18.08.2025) கர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.

வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் திங்கட்கிழமை காலை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்றையதினம் காலை முதல் வவுனியாவில் பொதுமக்கள் இயல்பு வாழ்கையில் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. நகரத்தில் அநேக வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன், சில பூட்டப்பட்டும் இருந்தன.

பாடசாலைகளில் கல்விசெயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றதுடன் மாணவர்களின் வரவு குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வங்கிகள் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றது.

இதேவேளை கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத்தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது.

இதேவேளை பழைய பேருந்து நிலையம் மற்றும் பசார்வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபார நிலையங்கள் கர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கும் வகையில் பூட்டப்பட்டிருந்தது.

இதேவேளை புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம்,நெடுங்கேணி,கனகராயன்குளம்,புளியங்குளம் பகுதிகளில் அனேகமான வர்த்தகநிலையங்கள் திறந்திருந்ததுடன், சிலவர்த்தக நிலையங்கள் கர்த்தாலுக்கு ஆதரவினை தெரிவித்து பூட்டி இருந்தமையினை அவதானிக்க முடிந்தது.