9 வயது சிறுமி மூளையை தின்னும் அமீபாவால் பலி : தொடரும் சோகம்!!

1007

கேரள மாநிலத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா எனக் கூறும் முதன்மை அமீபிக் மூளைக்காய்ச்சல் என்ற அரிய வகை தொற்று கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

அவ்வப்போது இதன் பாதிப்பு இருந்துவரும் நிலையில், கேரளத்தில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 4 ம் தேதி 3 மாத குழந்தைக்கு இந்த அமீபா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த குழந்தைக்கு தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் 40 வயது நபர் ஒருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

ஏற்கனவே ஆகஸ்ட் 14 ம் தேதி தமரசேரி பகுதியைச் சேர்ந்த 4 ம் வகுப்பு மாணவி அனன்யா(9) இந்த அரிய வகை தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தான் இந்த அமீபா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த குடும்பத்தினர் வேறு கிணற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த கிணற்றில் குளித்தவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடுகிறது. சில நீச்சல் குளங்களிலும் இருக்கலாம் எனத் தெரிகிறது.

சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழைந்து விடலாம். நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் வாழ்வதில்லை. அசுத்தமான நீரை குடிக்கும்போது பரவாது. குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுகிறது.

இந்தியாவில் 1971ல் முதல்முதலாக கண்டறியப்பட்ட நிலையில் க 2016ல் கேரளத்தில் முதல் பாதிப்பு அறியப்பட்டது. 2016 முதல் 2023 வரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டில் மட்டும் 36 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டை பொறுத்தவரை இத்துடன் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.