செல்வச் சந்நிதியில் 108 ஜோடிகளுக்கு திருமணம் : வாழ்வளிக்கும் சிங்கப்பூர் தம்பதி!!

929

அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வ சந்நிதியில் வறுமையில் உள்ள திருமணாகாத 108 ஜோடிகளுக்கு சிங்கப்பூர் தம்பதி, திருமணம் செய்துவைக்க முன்வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின், நிதியுதவியில், 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது .

தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடாத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

திருமணம் இடம்பெறவுள்ள 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்தோம்.

இந்நிலையில் அன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு 108 தம்பதியினரையும் வாழ்த்தி , அன்று மதியம் ஆலயத்தில் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.