வரதட்சணை கொடுமையால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

546

நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஷில்பா, தான் கர்ப்பமாக இருந்த நிலையில்,

கணவன் மற்றும் அவனது குடும்பத்தாரின் தொல்லையைத் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா (27).

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. ஷில்பா தற்போது கர்ப்பமாக இருந்தார். ஷிப்லாவும், பிரவீனும் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.

இவர்களின் திருமணத்தின் போது ரூ.50 லட்சம் வரதட்சணயாக ஷில்பா குடும்பத்தினர் பிரவீனுக்கு கொடுத்துள்ளனர். இதனிடையே திருமணமான ஒராண்டில் பிரவீன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு பானிபுரி உணவக தொழில் தொடங்கினார்.

இந்த தொழில் தொடங்க பணம் தரும்படி ஷில்பாவிடம் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து ஷில்பா குடும்பத்தினர் ரூ.10 லட்சம் பிரவீனுக்கு கொடுத்துள்ளனர்.

அதன் பின்னரும் ஷில்பாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரவீனும் அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் பிரவீனுடன் வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு ஷில்பா சென்றிருந்ததும், பின்னர் பிரவீன் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி அழைத்து வந்ததும் தெரியவந்தது. ஆனாலும், தொடர்ந்து ஷில்பாவுக்கு பிரவீன் குடும்பத்தினர் வரதட்சணை தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் ஷில்பா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ஷில்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஷில்பாவின் கணவன் பிரவீன், அவரது தாய் சாந்தா மற்றும் தங்கை பிரியா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.