
விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் சாவடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
கடந்த 27ஆம் திகதி இரவு அனுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக்கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கப்ரக வாகனத்தை அந்த பகுதியில் கடமையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர்.
இதன்போது குறித்த வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விசேட அதிரடிப்படையினரால் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்திருந்தனர்.
காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரது நிலமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் காலை சாவடைந்தார்.
வவுனியா கற்பகபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சாவடைந்துள்ளதுடன், பண்டிவிரிச்சான் பகுதியைச் சேர்ந்த நிக்சன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






