திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலியின் குடும்பம்!!

528

இந்தியாவில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் திருமண பேச்சுக்காக அழைக்கப்பட்ட 26 வயது ரமேஷ்வர் கெங்வாட் என்ற இளைஞர், அவரது காதலியின் குடும்பத்தினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்ணின் தந்தை உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மொத்தமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் உறவினர் வழங்கிய தகவலின் படி, ரமேஷ்வர் கெங்வாட் என்ற இளைஞருடன் தனது உறவுக்கார பெண் காதல் உறவில் இருந்துள்ளார்.

ஆனால், காதலன் ரமேஷ்வர் கெங்வாட் மீது பாலியல் கொடுமை மற்றும் போக்சோ(POCSO) குற்றச்சாட்டுகள் இருந்ததால் திருமணத்திற்கு பெண் வீட்டார்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளனர். எனவே காதலன் ரமேஷ்வர் கெங்வாட் மற்றும் அவரது பெற்றோரை பெண் வீட்டார் பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளனர்.

பேச்சுவார்த்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரு குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ரமேஷ்வர் கெங்வாட்-ஐ பெண்ணின் வீட்டார் ஒரு அறைக்குள் அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ரமேஷ்வர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.