இப்படி எல்லாமா மரணம் நிகழும் : விஷப்பூச்சி கடித்ததில் இளம்பெண் உயிரிழப்பு!!

680

விஷப்பூச்சி கடித்ததில் 19 வயதான இளம்பெண் சர்மிளா உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை ஆவடி கண்ணப்பாளையம், பாரதி நகரில் வசித்து வருபவர் சங்கர்.

இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள். இவரது மூத்த மகள் 19 வயது சர்மிளா.

இவர் அயப்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சர்மிளா ஆகஸ்ட் 29ம் தேதி காலை தூங்கி எழுந்தபோது அவருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து உடல் முழுவதும் அரிக்க தொடங்கியதால் அவர் சொரிந்து கொண்டே இருந்தார். சில நிமிடங்களில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் எல்லாம் வீங்கத் தொடங்கியது.

வீட்டிலிருந்த மஞ்சளை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டு குளிப்பதற்காக சர்மிளா சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி கீழே விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை சங்கர், சர்மிளாவை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சர்மிளாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சர்மிளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே சர்மிளாவின் தந்தை சங்கருக்கு இதை போன்று விஷப்பூச்சி கடித்து அரிப்பு ஏற்பட்டு உடலில் வீக்கம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது மகள் சர்மிளாவையும் விஷ பூச்சி ஏதாவது கடித்து உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீசார் முதல் கட்ட தகவலை வெளியிட்டனர்.